எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், உயர்நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர்களை ஒரு வாரத்தில் நியமிக்க சிபிஐ இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் நிலைய மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியன், மரியா கிளாட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது,
அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, அஜித்தின் காவல்நிலைய மரண வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர்களை ஒரு வாரத்தில் சிபிஐ நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது மனுதாரர் தரப்பில், சாத்தான்குளம் வழக்கு, அண்ணா பல்கலைக்கழக வழக்கு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையிலும் விசாரணை தாமதமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், அஜித்குமார் வழக்கின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும், மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துவிட்ட நிலையில், மீதி விசாரணையை சிபிஐ முடிக்கும் எனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில், நகை காணாமல் போனதாக நிகிதா கொடுத்த புகார் வழக்கையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அரசுதரப்பில், அந்த வழக்கும் சிபிஐக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், அனைத்து தரப்பிலும் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதியும், தடய அறிவியல்துறை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். மேலும், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.