எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்ற சிறார்களுக்கு மொட்டை அடித்த விவகாரத்தில் காவல் ஆய்வாளரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
எம்பிகே நகரில் ஆட்டோ கண்ணாடிகளை இளைஞர்கள் உடைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 8 இளைஞர்களை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் சிறார்கள் என்பதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. பின்னர் விசாரணைக்காக அழைத்து வந்த சிறார்களை தண்டிக்கவும் முடியாது என்பதால், மொட்டை அடித்து வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுவர்கள், காவல்நிலையத்தில் மொட்டை அடித்து அனுப்பியதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பெற்றோர், போராட்டம் நடத்தபோவதாக எச்சரித்தனர். இதனையடுத்து, காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.