எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில் தன்னுடன் இருக்கும் பாமக நிர்வாகிகளுக்கு தான் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என ராமதாஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார் ராமதாஸ். அதன்படி பா.ம.க.வின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு வழக்கறிஞர் கோபு நியமிக்கப்பட்டார். மேலும் பா.ம.க.வின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கப்பட்டு முரளி சங்கர் நியமிக்கப்பட்டார்.இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நியமித்துள்ளார். இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், பாமகவின் இணை பொதுச்செயலாளராக எம்.எல்.ஏ அருளை நியமித்திருப்பதாக அறிவித்தார். அப்போது பாமகவின் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விரைவில் தீர்வு வரும் என்றவர், இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில பொறுப்புகளுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார்.