எழுத்தின் அளவு: அ+ அ- அ
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலையிட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். விசாரணை ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, அரசியல் மற்றும் மீடியா தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தி 6 மாதங்களில் முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.