எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஐந்தாம் தேதி பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த்தப்பினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சேலத்தில் பதுங்கி இருந்த மருதுபாண்டி மற்றும் மகேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்த இருவரையும் பாபநாசத்தில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் வரும் 24ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மேலும், வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படும் லட்சுமணன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில், சந்தேகம் உள்ளதாகவும், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.