பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க தாய்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இணைந்து பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் உச்சிமாநாடு தாய்லாந்தில் நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். பாங்காக் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பும், ராணுவ அணி வகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இந்தியா மற்றும் தாய்லாந்து தேசிய கொடிகளுடன் வந்திருந்த அவர்களுடன் கை குலுக்கி பிரதமர் மோடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, நேபாளம், மியான்மர், பூடான் ஆகிய நாட்டின் தலைவர்களுடன் இணைந்து, கடல்சார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாவதை பிரதமர் மோடி மேற்பார்வையிடுகிறார். 

இதைத் தொடர்ந்து, நாளை நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன், ராணி சுதிடா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் பிரதமர் மோடியும், தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவும் தாய்லாந்தின் சிறந்த 6 கோவில்களில் ஒன்றான வாட் போ-வை பார்வையிடுகின்றனர்.

தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாளை இலங்கை செல்கிறார். இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமது இலங்கை பயணம் நடைபெறும் என்றும், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகேவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்த பயணம் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். பன்முகத்தன்மை கொண்ட இந்தியா - இலங்கை இடையேயான நட்பு குறித்து இந்த பயணத்தின்போது மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அங்கு நடைபெறவுள்ள பல்வேறு சந்திப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Night
Day