எழுத்தின் அளவு: அ+ அ- அ
சீனாவில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது. நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட போர் விமானங்கள், ஏவுகணைகள், பீரங்கிகளை ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
இரண்டாம் உலகப் போரின் 80ம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களை வரவேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், அவர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து முப்படை வீரர்களின் மிடுக்கான ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, துப்பாக்கிகளில் இருந்தும், பீரங்கிகளில் இருந்து குண்டுகள் சீறிப்பாய்ந்தன. பெண் ராணுவ வீராங்கனைகளின் அசத்தலான அணிவகுப்பு அனைவரிடத்திலும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
உலக நாடுகளின் தலைவர்களுடன் காரில் சென்று சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிட்டார்.
தொடர்ந்து விமானப்படையினரின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வானில் பறந்த போர் விமானங்களை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட்டனர்.
இதையடுத்து, சீனாவின் தயாரிப்பான HQ-19 anti - ballistic missile system மற்றும் சீனாவின் ட்ரோன்கள் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆயிரக்கணக்கான வெள்ளை புறாக்களும், வண்ண வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டது. அப்போது, கைகளில் சீன கொடியை அசைத்து அந்நாட்டு மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.