எழுத்தின் அளவு: அ+ அ- அ
தாங்கள் தங்கியிருந்த கட்டடத்தை ஏவுகணைகள் பலத்த சத்தங்களுடன் கடந்து செல்வதை கண்டு அச்சமடைந்ததாக ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
இஸ்ரேல்-ஈரான் இடையே தொடர்ந்து 7-வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரானில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஆபரேஷன் சிந்து மூலம் முதற்கட்டமாக ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அழைத்து செல்லபட்ட மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
ஈரானில் நிலைமை மோசமாக உள்ளதாக தாயகம் திரும்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் ஏவுகணைகள் தாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தை உரத்த சத்தங்களுடன் கடந்து செல்வதை கண்டு அச்சமடைந்ததாக தெரிவித்தனர். நிலைமை சீரடைந்ததும் ஈரானுக்குத் திரும்புவோம் என தெரிவித்த மாணவர்கள், தங்களை பத்திரமாக அழைத்து வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.