இஸ்ரேல் - பாலஸ்தீன பிணைக்கைதிகள் விடுவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் 'மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்' என இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் படையிடம் இருந்த இஸ்ரேலை சேர்ந்த பணயக்கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீன கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு எகிப்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் டிரம்ப் பங்கேற்க உள்ளார். 

அதற்கு முன்னதாக இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, 2 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் நடந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இதனால், வானமும், துப்பாக்கிகளும், சைரன்களும் அமைதியாக இருப்பதாகவும், இறுதியாக அமைதியான ஒரு புனித பூமியில் சூரியன் உதிக்கிறது என்றும் தெரிவித்தார். இதுஒரு போரின் முடிவு மட்டுமல்ல... மத்திய கிழக்கின் வரலாற்று விடியல் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டினார்.

முன்னதாக பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அடுத்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இஸ்ரேலின் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வரும் டிரம்பின் திட்டத்தை வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், உலகை இவ்வளவு விரைவாகவும் தீர்க்கமாகவும் நகர்த்திய டிரம்பை போல ஒரு அமெரிக்க அதிபரை இதுவரை பார்த்ததில்லை என பாராட்டினார்.

இதனிடையே இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றிய போது, அந்நாட்டு எம்பிக்களான அய்மன் ஓடே மற்றும் ஒஃபர் காசிஃப் ஆகியோர் "இனப்படுகொலை" என பதாகையை காண்பித்து  முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால், ட்ரம்ப் தனது உரையை நிறுத்தினார். தொடர்ந்து, முழக்கம் எழுப்பிய இரண்டு எம்பிக்களையும் பாதுகாவலர்கள் வெளியேற்றிய பின், மீண்டும் பேச்சை தொடங்கினார்.

varient
Night
Day