எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து விவாதிக்காததால் கூட்டம் குறித்த அறிக்கையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
சீனாவின் கியிங்டவ் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். கூட்டத்தில் ராஜ்நாத் ஆற்றிய உரையில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் குழு நடத்திய தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் மோதலைக் குறிப்பிட்டும் இந்தியாவின் கவலையைத் தெரிவித்தார். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கையின் படி தீவிரவாதத்திற்கு எதிரான மோதல் குறித்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் எந்தவித அணுகுமுறையும் எடுக்கவில்லை. அதேசமயம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி மட்டுமே கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார். இதனால் கூட்டறிக்கை இல்லாமல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம் நிறைவுபெற்றது.