4-ம் கட்டத் தேர்தல் - நாளையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்வதால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக கடந்த மாதம் 19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கடந்த 26-ம் தேதி 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 3-ம் கட்டமாக கடந்த 7-ம் தேதி அசாம், பீகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கா்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நகா்ஹவேலி மற்றும் டாமன்-டையூ, ஜம்மு-காஷ்மீா் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

அதன்படி மூன்று கட்டங்களாக நடந்து முடிந்துள்ள தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வரும் 13-ம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆந்திராவில் 25, பீகாரில் 5, ஜம்மு & காஷ்மீரில் 1, ஜார்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்ட்ராவில் 11,, ஒடிசாவில் 4, தெலங்கானாவில் 17, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, என 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வரும் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி இந்தத் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அர்ஜுன் முண்டா, கிஷன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் 4-ம் கட்டத் தேர்தலில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். 

இதனைத் தொடர்ந்து வரும் 20-ம் தேதி 5-ம் கட்டத் தேர்தலும் 25-ம் தேதி 6-வது கட்டமும் இறுதியாக ஜுன் 1-ம் தேதி 7-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. ஜுன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day