13 மாநிலங்களில் 88 மக்களவைத் தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்த இரண்டாம் கட்டத் தேர்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

13 மாநிலங்களில் 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று நடைபெற்ற இரண்டாவது கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து, கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா 8, மத்தியப் பிரதேசத்தில் 7, அசாம், பீகாரில் தலா 5, மேற்கு வங்கம், சத்தீஸ்கரில் தலா 3, காஷ்மீர், மணிப்பூர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. முன்னதாக, 89 தொகுதிகளில் தேர்தல் என அறிவிக்கப்பட்ட நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதி தேர்தல் மே 7 அன்று நடைபெறும் 3-வது கட்ட தேர்தலுக்கு  ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று 88 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 2-வது கட்டத் தேர்தலில் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், சசி தரூர், அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், பாஜகவின் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நடிகை ஹேமமாலினி, நடிகர் அருண் கோவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

இதனிடையே வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதில் மொத்தமாக 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 3-வது கட்டத் தேர்தல் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day