எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கப்பலூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எட்டூர்வட்டம், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப் புதூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஆகிய சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நான்கு சுங்கச் சாவடிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழங்கங்கள் வழங்க வேண்டிய 276 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்று கூறி சுங்கச் சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் போக்குவரத்துக் கழகங்கள் நிலுவைத் தொகையை வழங்காமல் நீட்டித்துக் கொண்டே சென்றால் நிலுவைத் தொகை 300 கோடி ரூபாய் , 400 கோடி ரூபாய் என அதிகரித்து விடும் என்றும், அரசு அதிகாரிகள் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொண்டு செயல்படாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, கப்பலூர், எட்டூர் வட்டம், சாலைப் புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச் சாவடிகள் வழியாக நாளை முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சுங்கச் சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.