ஹிமாச்சல் - வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பேரிடர்களில் சிக்கி இதுவரை 366 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு சொத்துகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில், இமாச்சலப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்றபடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர், பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உறவினர்களை இழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறிய பிரதமர் மோடி, தற்போதைய சவாலை எதிர்கொள்ள மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் பயணித்த அதிகாரி ஒருவர், பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு விளக்கினார்.

Night
Day