எழுத்தின் அளவு: அ+ அ- அ
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்கவும் ஆதார் அட்டையை 12வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் ஆதார் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும்போது தேர்தல் ஆணையம் மட்டும் ஆதார் அட்டையை தொடர்ந்து ஏற்றுக் கொள்ள மறுப்பதாக மனு தாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் ஏற்கெனவே கூறியுள்ள 11 ஆவணங்களை மட்டுமே பெற முடியும் என தேர்தல் ஆணையம் பிடிவாதமாக உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்ததோடு, ஆதார் எண்ணை இந்திய தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களில் 12வது ஆவணமாக சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக பெற முடியாது என்றும், சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்யும் வாக்காளர்கள் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த முறை ஆதார் அட்டையை ஏற்பதாக அறிவித்துவிட்டு இப்போது மறுப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆதார் அட்டை என்பது முகவரி சான்றாக மட்டுமே பெற முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, ஆதார் அட்டை ஒரு நபரின் அடையாள அட்டை என்று ஆதார் சட்டம் கூறுகிறது - எனவே பீகாரில் வாக்களார் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அது தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.