எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராணிப்பேட்டை அருகே மூன்று இளம் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரில், இருவர் சகோதரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் காதல் ஜோடிக்கு நடந்த கொடுமை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் பாலாற்றங்கரை அருகே அரசுக்கு சொந்தமான தென்னை பண்ணை உள்ளது. எப்போதும் ஆள் நடமாட்டம் காணப்படும் இந்த இடத்தில் சம்பவத்தன்று அவரக்கரை பகுதியை சேர்ந்த காதல் ஜோடி தனியாக நின்று பேசியுள்ளது.
அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் காதல் ஜோடியை கண்டதும், அவர்களை வழிமறித்து பேசியுள்ளனர். பிறகு காதலனை அடித்து விரட்டியடித்த அந்த இளைஞர்கள், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், உறவினர்களுடன் வந்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பார்த்திபன், சிவராஜ், ராஜா உள்ளிட்ட மூன்று இளைஞர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த மூவரும் மதுபோதையில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதில் பார்த்திபன், சிவராஜ் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மூவரையும் சிப்காட் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு 19 வயது ஆகும் நிலையில் அவர் நர்சிங் கல்லூரியில் படித்து வருவதும் போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.
ராணிப்பேட்டை பாலாற்றங்கரை அருகே ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் வைத்தே மாணவியை போதை இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.