எழுத்தின் அளவு: அ+ அ- அ
15-ஆவது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.
நாட்டின் 14-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் உடல் நிலை காரணமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் வாக்குப் பதிவில், மக்களவையில் 543 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் என மொத்தம் 788 உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நியமன எம்.பி.க்கள் உட்பட மக்களவையில் 293 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 129 உறுப்பினர்கள் என மொத்தம் 422 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதேபோன்று, இந்தியா கூட்டணிக்கு நியமன எம்.பி.க்கள் உட்பட மக்களவையில் 249 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 105 உறுப்பினர்கள் என மொத்தம் 354 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்த பின்னர் மாலை 6 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் முதல் வாக்காளராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு முதல் நபராக சென்ற பிரதமர் மோடி தேர்தல் ஊழியர்களுக்கு வணக்கம் தெரிவித்து தனது வாக்கை செலுத்தினார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாக்கு எண்ணும் மைய முகவர்களை நியமித்துள்ளார். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்பி சஞ்சய் குமார் ஜா ஆகியோரை தனது முகவர்களாக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 6 மணிக்கு எண்ணப்படுகின்றன.