பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் தற்போது பிறப்பித்துயுள்ள உத்தரவின்படி,
ஒரு வாக்காளர் தமது குடியுரிமையை நிரூபிக்க தேவையான அடையாளச் சான்றுகளில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அத்துடன் தமது தாயார் அல்லது தந்தையாரின் குடியுரிமையை நிரூபிக்கும் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இல்லை என்றால் அந்த வாக்காளரின் பெயர், புதிதாக தயாரிக்கப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாது என்றும், வாக்காளர் பட்டியலில் இருந்தும் பெயர் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அடையாளச் சான்றாக ஆதார் அல்லது ரேஷன் அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் பலர் வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் ஆணையத்தால் ஆவணங்களை சமர்ப்பிக்க குறுகிய காலக்கெடுவே விதிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் லட்சக்கணக்கான வாக்காளர்களால் எப்படி அரசு நிர்வாகத்திடம் சான்றுகளைப் பெற்று சமர்ப்பிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனை சுட்டிக் காட்டி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றம் கூடியதும் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட போது வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.