பி.இ-சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பொறியியல் பட்டபடிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நடப்பாண்டின் சேர்க்கைக்காக கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து வந்தனர். 

இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியுள்ளது. இது ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்கின்றன. மேலும், இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீடு 7.5 விழுக்காட்டின் கீழ் 51 ஆயிரத்து 4 பேர் பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்தனர்.  இதில் 47 ஆயிரம் மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.  இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழுள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

Night
Day