ரூ.1.22 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

தமது இரு மாநில பயணங்களின் முதல் கட்டமாக இன்று காலை உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் சென்ற அவர் பன்ஸவாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை அங்கு திரண்டிருந்த ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் மத்திய, மாநில அரசுகள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். மேலும் மாநில அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர், பிகானீர்-டெல்லி கன்டோன்மென்ட், ஜோத்பூர்-டெல்லி கன்டோன்ட்மென்ட், உதய்பூர்-சண்டிகர் வந்தே பாரத் ரயில்களையும் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் ஊழலால் ஏற்பட்ட காயங்களை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உச்சத்தில் இருந்தன என்றும் பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் பாதுகாக்கப்பட்டனர் என்றும் பிரதமர் குற்றம் சாட்டினார். ஆனால் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு வலுப்படுத்தப்பட்டு, புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

2014 மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டரை கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் எப்போதும் ஆதிவாசி சமூகத்தை புறக்கணித்ததாகவும், ஆனால் பாஜக அரசு ஆதிவாசி சமூகத்திற்கு முன்னுரிமை அளித்து தனி அமைச்சகத்தை உருவாக்கியதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

varient
Night
Day