எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேர்தல்களில் அளிக்கப்படும் தபால் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளில், தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கும், மின்னணு வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கும் துவங்கும். பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பே தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவிடும். வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகள் முதலிலேயே எண்ணப்பட்டாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் அனைத்து சுற்று எண்ணிக்கையும் முடிந்த பிறகே தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், தேர்தல் செயல்முறையை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆறு மாதங்களில் ஏற்கனவே 29 குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துள்ளது. அந்த வகையில், தபால் வாக்குகளை எண்ணும் செயல்முறையை மேலும் நெறிப்படுத்த தேர்தல் ஆணையம் 30வது நடவடிக்கையை அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் சீரான தன்மை மற்றும் தெளிவை உறுதி செய்வதற்காக, இனிமேல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் தபால் வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதாவது 20 சுற்றுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலை இருந்தால் 19வது சுற்றில் தபால் வாக்குகள் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அந்த முடிவாகும்.
அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகள் இருக்கும் சந்தர்ப்பங்களில், தாமதம் ஏற்படாமல் இருக்கவும், எண்ணும் செயல்முறையை மேலும் நெறிப்படுத்தவும் போதுமான எண்ணிக்கையிலான மேசைகள் மற்றும் எண்ணும் ஊழியர்கள் இருப்பதை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.