ராமர் கோவிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிதாக திறக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஒரே​நாளில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர். தொடர்ந்து  பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், கட்டுங்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் பிரதிஷ்டை விழா திங்கட்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. மஞ்சள் பட்டுடுத்தி ஜொலிக்கும் ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பாலராமர் அருள் பாலித்தார். இதில், பிரதமர் பங்கேற்று தீபாராதனை காண்பித்து பாலராமரை பிரதிஷ்டை செய்து வணங்கினார். இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அயோத்தி ராமர் கோவிலில் நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதிகாலை முதலே குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிய நிலையில், ஆங்காங்கே பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், ஒரேநோளில் 3 லட்சம் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2வது நாளாக இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், ராமர் கோவிலைச் சுற்றி 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி மக்கள் முண்டியத்து செல்வதால் காவலர்கள் திணறி வருகின்றனர். 

இதனிடையே அயோத்தி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. ராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரிக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில் அயோத்திக்கு வரும் அனைத்து சாலைகளையும் போலீசார் மூடியுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அயோத்தியில் காத்திருக்கும் நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


Night
Day