எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978ஆம் ஆண்டில் பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரின் விவரங்களை மத்திய தகவல் ஆணையத்திடம் நீரஜ் என்பவர் கேட்டிருந்தார். இதனை ஏற்று, குறிப்பிட்ட தகவலை வழங்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2016ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, டெல்லி பல்கலைக் கழகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆவணங்களை நீதிமன்றத்தில் காண்பிக்க தயார் என்றும், தனிநபரின் ஆய்வுக்காக காண்பிக்க முடியாது என தெரிவித்திருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமையை விட ஒரு தனிப்பட்ட நபரின் ஆவணங்களின் உரிமை உயர்வானது என்றும், RTI-ன் கீழ் தனிப்பட்ட விவரங்களை யாரும் கேட்க முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா இன்று தீர்ப்பை வழங்கினார். அதில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.