பிட்டுக்காக மண் சுமந்தார் ஈசன்... "பிட்"-க்காக சுவர் ஏறினார்கள் இவர்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

அரியானாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களது உறவினர்கள் பள்ளி சுவர் மீது ஏறி காப்பியடிப்பதற்கு பிட் துண்டு சீட்டுகளை வழங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரை பணயம் வைத்து மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய உறவினர்களை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

நாடு முழுவதும் பள்ளி பொதுத் தேர்வுகள் ஆங்காங்கே தொடங்கி நடைபெற்று வருகிறது. 
இந்த தேர்வை முறைகேடு இன்றி நடத்தி முடிக்க அரசு சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பறக்கும்படையினர் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரியான மாநிலத்தில் கடந்த 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாரு பகுதியில் உள்ள சந்திரவதி பள்ளியில் புதன்கிழமை 10ம் வகுப்பு பொதுதேர்வு நடைபெற்றது. தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வினாக்களுக்கான பதிலை, உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் ஆகியோர் வகுப்பறையின் வெளியில் இருந்து மாணவர்களுக்கு பிட் துண்டு சீட்டுகளை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆபத்தான முறையில் தேர்வு மையத்தின் சுவர்களில் ஏறி, ஆங்காங்கே ஜன்னல் வழியாக மாணவர்களுக்கு பிட் துண்டு சீட்டுகளை கொடுத்துள்ளனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் எடுத்து சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கவனத்திற்கு சென்றது இந்த விஷயம்.

இதுதொடர்பாக பதிலளித்த அதிகாரிகள், இந்த தேர்வு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்த சூழ்நிலையிலும் தேர்வில் மோசடி நடக்க இடம் அளிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்வு மையங்களில் போலீசார் பணியமர்த்தப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Night
Day