எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த மாதம் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்சி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தடை விதிக்கவும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தவும் கோரி தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்டோர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. காரசார விவாதங்கள் நேற்று நடைபெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமன்றமும் பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை நேற்று ஒத்திவைத்தது. இந்நிலையில், தவெக உள்ளிட்டோர் தொடர்ந்த இந்த வழக்கில், வரும் திங்கள் கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.