பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு - விக்ரம் மிஸ்ரி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபரேஷன் சிந்தூர்-ல் குறிவைக்கப்பட்ட ஒன்பது பயங்கரவாத முகாம்கள் நம்பகமான உளவுத்துறை தகவல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. பஹல்காம் போன்ற தாக்குதல் இனியும் நடத்தப்படாமல் இருக்க ஆப்ரேசன் சிந்தூர் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆப்ரேசன் சிந்தூர் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கலோனல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் டெல்லியில் விளக்கம் அளித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பிற்கு முன்னதாக, இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் குறித்த வீடியோ வெளியிடப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, பஹல்காமில் நடந்த தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனது என்று குற்றம் சாட்டினார். குடும்பத்தினர் முன்னிலையில் தலையில் சுட்டு தீவிரவாதிகள் படுகொலை செய்ததாக கூறிய அவர், காஷ்மீரில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வருவதை சீர்குலைப்பதே தீவிரவாதிகளின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார். இந்தியாவிற்கு எதிரான மேலும் தாக்குதல்கள் வரவிருப்பதாக உளவுத்துறை சுட்டிக்காட்டியதாகவும், இதுபோன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியா தனது பதில் தாக்குதல் நடத்தும் உரிமையைப் பயன்படுத்தியதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இந்தியாவின் நடவடிக்கைகள் அளவிடப்பட்டது பொறுப்பானது என்றும், இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.   

பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுடனான பாகிஸ்தானின் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும், பஹல்காம் சம்பவம் நடந்த 15 நாட்கள் ஆன பிறகும் தீவிரவாத உள்கட்டமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டினார். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் திட்டமிட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகக் கருதப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஆப்ரேசன் சிந்தூர் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதாக கூறினார். ஒன்பது தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன என்றும், 2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் பயிற்சி பெற்ற முரிட்கேவும் இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நேற்று நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்பட்டது என்றும், 25 நிமிடங்களில், பாகிஸ்தானின் பல பெரிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடையே உரையாற்றும் போது, ​​பாகிஸ்தானுக்குள் 12-18 கிலோ மீட்டர் தொலைவில் சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம், முசாபராபாத்தில் உள்ள சவாய் நல்லா, சையத்னா பிலால் முகாம்கள், கோட்லியில் உள்ள குல்பூர் முகாம், பிம்பெரில் உள்ள பர்னாலா முகாம் உட்பட அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களைக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டார்.

செய்தியார்கள் சந்திப்பில் விளக்கமளித்த விங் கமாண்டர் வியோமிகா சிங், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப்படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதாக கூறினார். 9 தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன என்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.


Night
Day