எழுத்தின் அளவு: அ+ அ- அ
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின. இதைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக கடந்த வாரம் சிறப்பு விவாதம் நடைபெற்றது.
எனினும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் அலுவல்கள் ஏதும் நடக்காமல் முடங்கின. இந்நிலையில், 2 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றம் இன்று கூடியது. மக்களவையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை தொடங்கியும் தொடர்ந்து அமளி நிலவியதால் மக்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, மாநிலங்களவை காலையில் கூடியதும் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களை உறுப்பினருமான சிபு சோரன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் மாநிலங்களவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.