“ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களிடம் ‘OTP’ பெறுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விதித்த தடையை எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் உறுப்பினர் சேர்க்கையை நடத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக ‘OTP’ பெறப்படுவதாக குற்றம் சாட்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அரசியல் நோக்கங்களுக்காக ஆதார் தகவல்களை சேகரிக்க எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ஓடிபி பெறுவது உள்ளிட்டவை இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் தனியுரிமை உள்ளிட்டவற்றை மீறும் செயல் என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுமக்களிடம் இருந்து திமுக-வினர் OTP பெறுவதற்கு தடை விதித்து கடந்த மாதம் 21ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உறுப்பினர் சேர்க்கையின் போது OTP கேட்பது உறுதிப்படுத்தலுக்காக மட்டுமே என்றும், பல்வேறு செயலிகளில் ஏன் கால் டாக்சி சேவைகளில் கூட OTP பெறப்படுகிறது என்றும் வாதிட்டார். எனவே உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
ஆனால் திமுக தரப்பு வாதங்கள் மற்றும் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக் கூறியதோடு, மனுதாரர் இடைக்கால தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்து திமுகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.