எழுத்தின் அளவு: அ+ அ- அ
பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான செயல்களில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பாஜக அரசுடன் இணைந்துக்கொண்டு வாக்குத் திருட்டிலும், குற்றச்செயல்களிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் செய்து, வாக்கு மோசடியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி வெளியிட்டார். அதில், பல்வேறு தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பதை ராகுல் காந்தி அம்பலப்படுத்தினார்.
மேலும், முதல் முறை வாக்காளர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 20 வயது உடையவர்கள் அல்ல எனவும், 80 வயதுடைய ஒருவர் முதல்முறை வாக்காளர்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஒரே விலாசத்தில் 45 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சில வாக்காளர்களுக்கு புகைப்படங்களே இல்லை எனவும் ஆதாரத்துடன் ராகுல் காந்தி எடுத்துரைத்துள்ளார்.
ஒரே தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி உள்ள ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்ட முகவரியில் 40 ஆயிரம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரே வாக்காளரின் பெயர், பல்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளதாகவும், பல வாக்காளர்களுக்கு தந்தை, தாய் பெயர்கள் இல்லை என்றும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வேறு மாதிரி இருந்தாலும், தேர்தல் முடிவு பாஜகவிற்கு சாதகமாக உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
மேலும், மகாராஷ்டிரா தேர்தலில் மாலை 5:30 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரித்ததாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும் கூறி உள்ளார்.