எழுத்தின் அளவு: அ+ அ- அ
உத்தரகாண்டில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் 190 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் நேற்று முன்தினம் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், வீடுகள், கட்டிடங்கள் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 5 பேர் பலியானார்கள். மேகவெடிப்பு மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் புஷ்கர் தமி, பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 190 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருகிறது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், உத்தரகாண்ட் போலீசார் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொறியாளர்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் உட்பட 225 க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். தேடல் நடவடிக்கையில் மோப்பு நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே சஹஸ்த்ரதாராவிலிருந்து ஐந்து ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக மாட்லி, பட்வாரி மற்றும் ஹர்சில் இடையே இயக்கப்படுகின்றன. மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாட்லியில் தற்காலிக ஹெலிபேட் அமைக்ப்பட்டுள்ளது. உத்தரகாசியில் மீட்பு படையினரால் மீட்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மாட்லி இறங்கு தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.