தெரு நாய்கள் பிரச்னை - உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடித்து  முகாம்களில் அடைக்கவும், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தெருநாய்கள் நுழையாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. வழக்கின் பின்னணி மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தலைநகர் டெல்லியில் கடந்த ஆகஸ்டு மாதம் நாய்க்கடி சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வந்தன. குறிப்பாக நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ரேபிஸ் நோய் தாக்கம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை கொண்டு, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு டெல்லி அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தெரு நாய்களை பிடிப்பதற்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன. 

தொடர்ந்து, மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், தெருநாய்களின் பிறப்பை கட்டுப்படுத்த கருத்தடை செய்வதை கட்டாயமாக்கும் 2001ஆம் ஆண்டின் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தது. 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

தொடர்ந்து மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க ஆணையிட்டனர். தொடர்ந்து, தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தவும், ரேபிஸ் போன்ற நோய் தொற்று பாதிப்பு கொண்ட நாய்களை காப்பகத்தில் அடைக்கவும் ஆணையிட்டனர். குறிப்பாக பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கவும் தடை விதித்தனர்.

இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை அப்புறப்படுத்துவதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் உறுதி செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அப்புறப்படுத்தப்படும் தெருநாய்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள காப்பகங்களுக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. 

மேலும், மக்கள் அதிகம் வந்து செல்லும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தி இருக்கிறது. 

இதேபோல், விலங்குகளால் ஏற்படக்கூடிய விபத்தை தடுப்பதற்காக, நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகள் குறித்து புகார் அளிப்பதற்காக இலவச அவசரகால எண்ணை ஏற்படுத்த வேண்டும் என்றும், இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு, 8 வாரங்களுக்குள் உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு வளாகங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்த பிறகு மறுவாழ்வு மையங்களுக்கு மாற்ற வேண்டும் - தெரு நாய்களை பிடித்த அதே இடத்தில் மீண்டும் விடக்கூடாது - அப்படி செய்வது, மொத்த நோக்கத்தையும் தோல்வியடையச் செய்யும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்யுமா?, தெரு நாய்களை கருத்தடை செய்து, காப்பகங்களுக்கு மாற்றுவது, மனிதர்களின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் நலனை சமநிலைப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...

Night
Day