எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் வெற்றி அடைந்ததாக டெல்லியில் முப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதனைத் தொடர்ந்து பகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் டிரோன்கள் மூலம் நடத்திய தொடர் தாக்குதலை இந்திய படைகள் வெற்றிகரமாக தாக்கி அழித்தன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதலை நிறுத்தும் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக முப்படை உயர் அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது அப்போது பேசிய ஏர் மார்ஷல் ஏகே பார்தி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய படையின் தாக்குதல் வெற்றியடைந்ததாக தெரிவித்தார். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தியா பதிலடி கொடுத்ததாகக் கூறிய ஏகே பார்தி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத கட்டமைப்பை அழிப்பது மட்டுமே நோக்கம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஏராளமான ட்ரோன்களை நடுவானிலேயே தடுத்து தாக்கி அழித்ததாக தெரிவித்தார். பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீனா தயாரிப்புகளான பிஎல் 15 ஏவுகணை, சோங்கர் டிரோன்கள் ஆகியவற்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறினார். வரும் காலங்களில் தேவை ஏற்பட்டால் எந்தவித பணிகளையும் மேற்கொள்ள நமது அனைத்து ராணுவ தளங்களும் பாதுகாப்பு அமைப்புகளும் முழுமையான செயல்பாட்டில் இருப்பதாகவும் தயார் நிலையில் இருப்பதாகவும் ஏர் மார்ஷல் ஏகே பார்தி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அப்பாவி குடிமக்கள் தாக்கப்படுவதாக கூறினார். பஹல்காம் தாக்குதல் இந்த பாவச் செயல் முழுமையடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ என் பிரமோத், பலவகையான சென்சார்கள் மற்றும் உள்ளீட்டுக் கருவிகளை சிறப்பாக பாதுகாத்தும் பயன்படுத்தியும் அச்சுறுத்தல்களை தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார். இவையனைத்தும் கடற்படையின் வான் பாதுகாப்பு படையின் செயல்பாடுகளின் கீழ் நடைபெறுவதாகவும் இதன் மூலம் ட்ரோன்கள், அதிவேக ஏவுகணைகள், போர் விமானங்களை போன்ற அச்சுறுத்தல்களை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்றும் கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ என் பிரமோத் தெரிவித்தார்.