எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை சூளைமேட்டில் மாமூல் கொடுக்காத ஆத்திரத்தில் திமுக பெண் கவுன்சிலர் வண்டி கடையை சூறையாடியதால் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேட்டு பகுதியை சேர்ந்தவர் பிரேம். இவர் தனது வீட்டின் எதிரே தள்ளுவண்டி கடையில் சிறிய கையேந்தி பவன் உணவகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் 112வது வார்டு பெண் திமுக கவுன்சிலர் எலிசபெத் மற்றும் அவரது கணவர் அகஸ்டின் பாபு ஆகியோர் தள்ளுவண்டி கடை நடத்தும் பிரேமிடம் தொடர்ச்சியாக மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் கடையை நடத்த முடியும் என மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பிரேம் திமுக கவுன்சிலருக்கு கொடுத்த நிலையில், 25 ஆயிரம் ரூபாய் அளித்தால்தான் அனுமதிப்பேன் எனக்கூறி அதனை திரும்ப கொடுத்துள்ளார். பின்னர், மாநகராட்சி ஊழியர்களை வைத்து தள்ளுவண்டி கடையை உடைத்து பொருட்கள் அனைத்தையும் நாசமாக்கி திமுக கவுன்சிலர் எலிசபெத் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் தள்ளுவண்டி கடைக்காரர் பிரேம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பிரேம் தனது குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக திமுக கவுன்சிலர்கள் நடைபாதை கடை வியாபாரிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி மாமூல் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஆளும் திமுகவினரின் அராஜகபோக்கை காவல் துறையினரும் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.