எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அமலுக்கு வந்தது. ஏற்கனவே இருந்த 4 அடுக்கு வரிமுறைக்குப் பதிலாக இனி 5 மற்றும் 18 சதவீதம் வரி மட்டுமே இனி அமலில் இருக்கும். 12% ஜிஎஸ்டி வரியில் இருந்த பெரும்பாலான பொருட்கள் 5% வரி விகிதத்தின் கீழ் வந்து விட்டதால் அவற்றின் விலை குறைந்துள்ளன. அதேபோல 28 % ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்த அனைத்துமே 18 % ஜிஎஸ்டி வரி விதிப்பின் வந்துள்ளதால் அந்த பொருட்களின் விலை 10% வரை குறைந்துள்ளன. இதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்துள்ளன. என்னென்ன பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம், மொத்தம் 396 பொருட்கள் ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 285 பொருட்கள் 18% வரம்புக்குள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பல அன்றாட வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, டிஷ்வாசர், வாக்கம் கிளீனர், மைக்ரோவேவ் ஒவன், இன்டக்ஷன் குக்கர், ரைஸ் குக்கர் போன்ற மின்சார சமையல் சாதனங்கள், கிரைண்டர்கள், மிக்சி, ஹேர் டிரையர், அலங்கார விளக்குகள் போன்றவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத அடுக்குகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் ஆகியவற்றின் விலை 1000 முதல் 5000 ரூபாய் ஆயிரம் வரை குறைந்துள்ளது.
உதாரணத்திற்கு 40 இன்ச் டிவியின் விலை 22,000 ஆக இருக்கும் நிலையில், 28 சதவீத ஜிஎஸ்டியாக 6 ஆயிரத்து160 ரூபாய் சேர்த்து 28 ஆயிரத்து 160 ரூபாயாக ஆக இதுவரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதால் ஜிஎஸ்டி 3 ஆயிரத்து 960 சேர்த்து 25,960 ரூபாயாக ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் 2,200 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதேபோல, ஏசிக்களின் விலை ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை குறைந்துள்ளது. 2 டன் ஏசிக்களுக்கு 3 ஆயிரத்து 516 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
இதே போல சிறிய ரக கார்கள் ஆயிரத்து 200 சிசிக்கு குறைவானவை, பைக்குகள் 350 சிசிக்கு குறைவானவைகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 80 ஆயிரம் ரூபாய் விலையில் உள்ள பைக்குகளின் விலையில் 6 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. 1.25 லட்சம் ரூபாய் வரை உள்ள பைக்குகளின் விலை 10 ஆயிரம் வரையும், 4.25 லட்சம் ரூபாய் வரை உள்ள கார்களின் விலையில் 34 ஆயிரமும், 7.5 லட்சம் ரூபாயாக உள்ள கார்களின் விலை 60 ஆயிரம் வரையும் குறைந்துள்ளது.
சுற்றுலாவை ஊக்குப்படுத்தும் வகையில் ஓட்டல் அறைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 1000 ரூபாய் கட்டணத்துக்கும் கீழ் உள்ள ஓட்டல் அறைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. 1000க்கு மேல் 7,500 ரூபாய்க்குள் கட்டணம் உள்ள அறைகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 500 ரூபாய் வரை கட்டணம் குறைந்துள்ளது.
நீண்ட கால கோரிக்கையாக இருந்த சிமென்ட்களும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் பட்டியலில் கொண்டு வரப்பட்டு அதன் ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு மூட்டை சிமென்ட் விலையில் 30 வரை குறைந்துள்ளது. ஐஸ்கிரீம், சாக்லெட் ஆகியவை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், 1 லிட்டர் ஐஸ்கிரீம் விலை 33 ரூபாய் வரையும், ஒரு கிலோ சாக்லெட் கேக்களின் விலை 94 ரூபாய் வரையும் குறைந்துள்ளது.
வெண்ணெய், நெய், சீஸ், பழச்சாறு, ஜாம், பேரீச்சம் பழம் ஆகியவற்றின் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 100 கிராம் வெண்ணெய் 4 ரூபாய் வரை குறைந்துள்ளது. 1 லிட்டர் மிக்சட் ப்ரூட் ஜூஸ் விலை 8 ரூபாய் வரை குறைந்துள்ளது. பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் 5 முதல் 10 ரூபாய் வரை செலவு குறைந்துள்ளது.
சமீபத்தில் பாப்கார்னுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது பெரும் பேசுபொருளானது. அதிலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிராண்டட் பாப்கார்னுக்கு 12 சதவீத வரியும், பாக்கெட் இல்லாத பாப்கார்ன்களுக்கு 5 சதவீத வரியும், இனிப்பு பாப்கார்னுக்கு 18 சதவீத வரியும் என வெவ்வேறு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது இப்பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான பாப்கார்ன்களும் 5 சதவீத வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பால் பவுடர் , நெய், வெண்ணெய், condensed milk இவை அனைத்தும் 12% வரி விகிதத்தில் இருந்து 5% என்ற வரி விதிப்பின் கீழ் வந்துள்ளன. எனவே இவற்றின் விலை 7% வரை குறைந்துள்ளது. அதாவது 100 ரூபாய் விலை கொண்ட பொருள் 12% ஜிஎஸ்டியால் 112 ரூபாய் கொடூத்து வாங்கப்பட்டது. அதுவே 5% வரியின் கீழ் வந்துள்ளதால் 100 ரூபாய் பொருளுக்கு ஜிஎஸ்டி உடன் இனி 105 ரூபாய் செலுத்தினால் போதும். சோப்பு, ஷாம்பு, ஹேர் ஆயில், டூத் பேஸ்ட், டால்கம் பவுடர், ஆடைகள் மற்றும் காலணிகளின் விலையும் குறைகிறது.
சில வகை மருந்துகளுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. அது 5%இன் கீழ் வந்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இதேபோல் சில மருத்துவ உபகரணங்களின் மீதான வரிகளும் 18 மற்றும் 12 சதவீதம் இருந்து 5 சதவீதமாக குறைந்திருப்பது பலனளிக்கும் விஷயமாகும். ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்துகளுக்கு 100 ரூபாய் வரையும், குறிப்பாக புற்றுநோய் மருந்துகளுக்கு ஆயிரத்து 200 வரையும் விலை குறைந்துள்ளது.
சில வகை காலணிகள் மற்றும் துணிமணிகளும் 12% ஜிஎஸ்டியில் இருந்து 5% கீழ் வந்துள்ளதால் அவற்றின் விலை 7% அளவுக்கு குறைந்து விட்டது. உரங்கள் மற்றும் விவசாய பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆக மாறியுள்ளதால் அவற்றின் விலையிலும் பெரிய அளவிலான மாற்றத்தை பார்க்க முடியும்.
ஜிஎஸ்டி வரிகுறைப்பில் டிராக்டர்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய டிராக்டருக்கு 42 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். டிராக்டர் டயர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிராக்டர் டயர்களின் விலையில் 6 ஆயிரத்து 500 ரூபாய் குறைந்துள்ளது.
மாணவர்கள் பயனடையும் வகையில், கல்வி உபகரணங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் மீதான வரிகள் 12 மற்றும் 5 சதவீதம் என இருந்தது தற்போது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பேடுகள், ரப்பர், பென்சில், கிரெயான்ஸ் போன்றவற்றில் 850 ரூபாய் வரை பெற்றோரால் இனி சேமிக்க முடியும். அதே வேளையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் சில பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மற்றும் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 2500 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆடைகள், சில கட்டிட பொருட்கள், சில வாசனை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி 2.0 வை தொடர்ந்து 28% என்ற வரி விதிப்பையே முழுமையாக நீக்குவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு நீக்கப்படும் பட்சத்தில் 28% வரி விதிப்பின் கீழ் இருக்கக்கூடிய பல்வேறு பொருட்களும் 18% வரி விதிப்பின் கீழ் வந்துவிடும். எனவே இந்த பொருட்களின் விலையில் 10% வரை குறையும்.
இதன் மூலம் மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை என்பது மக்கள் சற்று பயனடையும் வகையில் அமைந்துள்ளது.