எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி விழாவாகவும் முக்கிய விழாவாகவும் இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றித் திருநாள் என்ற பொருளுடைய விஜயதசமி தீமைகள் மற்றும் பொய்மைகளை நன்மையும் நீதியும் வென்றதை அனுசரிக்கும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விஜயதசமியையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விஜயதசமி விழா அதர்மத்தை தர்மம் வென்றதன் அடையாளம் என்றும் அதுவே நாம் உண்மை மற்றும் நீதியின் பாதையை பின்பற்ற ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கோபம், அகங்காரம் போன்ற எதிர்மறைப் போக்குகளைத் துறந்து, தைரியம், உறுதிப்பாடு ஆகிய நேர்மறையானவற்றை ஏற்றுக்கொள்ளவும் விஜயதசமி நன்னாள் கற்றுக்கொடுப்பதாக பதிவிட்டுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முன்னேறும் ஒரு சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப இந்த விஜயதசமி நம்மை ஊக்குவிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வெற்றியைத் தரும் விஜயதசமி விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீமை மற்றும் பொய்களை வென்ற இந்நாளில் தனது சக இந்தியர்களுக்கு நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். தைரியம், அறிவு மற்றும் பக்தி ஆகியவை நமது பாதைகளை வழிநடத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.