கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கிய தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சுமார் 50 சதவீதம் அளவிலான நன்கொடையை பாஜக அள்ளியுள்ளது. நன்கொடையை வாரி வழங்கிய பல நிறுவனங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்ற தகவலும் வெளியாகி தலைசுற்ற வைத்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு பெருநிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி எஸ்பிஐ வங்கி, செவ்வாய் கிழமை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. 

2019 ஏப்ரல் மாதம் தொடங்கி 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை 22 ஆயிரத்து 217 தேர்தல் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு அவற்றில், 22 ஆயிரத்து 30 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக மாற்றி விட்டதாகவும், மீதமிருந்த 187 தேர்தல் பத்திரங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணமாக்கப்படாததால், பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்தது. தற்போது, எஸ்பிஐ வங்கி அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியல் இரு பிரிவுகளாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை என, தனித்தனியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம்பெறவில்லை.

இதில் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய, அதாவது அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் முதல் 3 இடங்களை பெற்றுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் முதல் இடத்தில் உள்ளார். அவர் நடத்தி வரும் Future gaming and hotel services என்ற நிறுவனத்தின் மூலம், ஆயிரத்து 368 கோடி ரூபாய் அளவிற்கு  தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டு, நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், Megha engineering and Infrastructures நிறுவனம் 966 கோடி ரூபாய்க்கும் Qwik supply chain pvt ltd 410 கோடி ரூபாய் அளவிற்கும் தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அள்ளி வழங்கி உள்ளன. 

அடுத்தபடியாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியுள்ள வேதாந்தா நிறுவனம் 400 கோடி ரூபாய் அளவிற்கு தேர்தல் நிதி வழங்கி உள்ளது. இதேபோல் ஏர்டெல், மூத்தூட் பைனான்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களும், பல நூறு கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்றதில் பாஜக முதல் இடத்தில் உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக 6 ஆயிரத்து 60 கோடி ரூபாய் அளவிற்கு நிதி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான அந்த கட்சிக்கு ஆயிரத்து 609 கோடி ரூபாய் அளவிற்கு நிதி கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆயிரத்து 420 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடை கிடைத்துள்ளது. 

இந்த பட்டியலில், 639 கோடி ரூபாயுடன் திமுக 6வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த தேர்தல் பத்திரங்களில் 47.5 சதவீதம் அளவுக்கு நன்கொடையை அள்ளி இருக்கிறது பாஜக. இதனிடையே, எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடையை கொடுத்திருக்கின்றன என்ற விவரங்களையும் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

Night
Day