ஓய்வு பெற்றது மிக் 21 ரக விமானம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போர்களில் முக்கிய அங்கம் வகித்து வந்த மிக்-21 போர் விமானத்துக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சண்டிகரில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் நிகழ்த்திய சாகசம் மெய்சிலிர்க்க வைத்தது.

ரஷிய தயாரிப்பான மிக் 21 போர் விமானம் கடந்த 1963ம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இதுவைரை ஆயிரத்து 200 மிக் ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு சேவை ஆற்றியுள்ளன. இந்திய விமானப் படையில் இந்த ரக போர் விமானங்கள் சிறுத்தைகள் என்று அழைக்கப்பட்டு வந்தன. 1965 மற்றும் 1971ல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போர், கார்கில் போர், 2019 பாலாகோட் தாக்குதல் உள்பட பல்வேறு போர்களில் மிக் 21 ரக விமானங்கள் முக்கியப் பங்காற்றியது. சுமார் 63 ஆண்டுகளாக வானத்தை வட்டமடித்து நாட்டை பாதுகாத்த மிக்-21 ரக விமானங்களுக்கு இன்றுடன் ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய விமானப்படையில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

இதற்காக மிக் 21 ரக விமானங்களுக்கான வழியனுப்பு விழா பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இன்று நடைபெற்றது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின்ன தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில், பாராசூட்டில் குதித்தும், துப்பாக்கிகளை சுழற்றியும் விமானப்படை வீரர்கள் செய்த சாகசங்கள் மெய்சிலிர்க்க வைத்தன.

விமானப்படை வீரர்களை தொடர்ந்து போர் விமானங்கள் வானில் சீறிப் பாய்ந்து சாகசத்தில் ஈடுபட்டன.  விமானப்படையின் சூர்ய கிரண் குழுவின் ஹாக் Mk132 விமானங்கள் வானில் சுழன்றடித்து நிகழ்த்திய சாகசங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

சாகச நிகழ்ச்சிகளை தொடர்ந்து, விமானப்படை தளபதி மார்ஷல் ஏ பி சிங் குழுவினரால் மிக்-21 ரக போர் விமானம் சண்டிகர் வான்பரப்பில் பறக்க விடப்பட்டது. பின்னர் தரையிறங்கிய மிக்-21 போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து water gun salute மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து விழாவில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக் 21 வெறும் விமானம் மட்டும் அல்ல, அது இந்தியா-ரஷ்யா உறவுக்கு முக்கிய சான்று என்று கூறினார். மிக்-21 போர் விமானங்கள் பல சந்தர்ப்பங்களில் அதன் உறுதியான திறனை நிரூபித்திருப்பதாக கூறிய அவர், நமது நாட்டின் நினைவுகளிலும் உணர்ச்சிகளிலும் மிக்-21 ஆழமாகப் பதிந்துள்ளதாக குறிப்பிட்டார். 1963ம் ஆண்டு, மிக்-21 முதன்முதலில் இணைந்ததிலிருந்து, இன்று வரையிலான 60 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பயணம் ஒப்பிடமுடியாதது என்று ராஜ்நாத் சிங் கூறினார். இவ்வளவு நீண்ட பயணத்தில், மிக்-21 போர் விமானம் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு அதன் திறனை நிரூபித்துள்ளது என்றும் பாராட்டினார்.

varient
Night
Day