எழுத்தின் அளவு: அ+ அ- அ
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது நாளாக முடங்கியது.
மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து பல்வேறு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி, இருஅவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், 10வது நாளாக இன்று கூடிய மக்களவையில், பீகார் வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்தும், அமெரிக்கா வரிவிதிப்பு நடவடிக்கையை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இது தவறான நடத்தை எனவும் நீங்கள் நாடாளுமன்ற விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை கேட்காமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்நது அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், அவை கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், திங்கட்கிழமை வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோன்று, மாநிலங்களவையிலும் பீகார் வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்தும், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையை குறிப்பிட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 12 மணி வரை மாநிலங்களவையை ஒத்தி வைத்து துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் உத்தரவிட்டார்.
பின்னர் மீண்டும் மாநிலங்களவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், அவைத் தலைவர் இருக்கையை சூழ்ந்துக் கொண்டு பீகார் விவகாரத்தில் விவாதம் நடத்தக்கோரி முழக்கம் எழுப்பினர். இருப்பினும் கேள்வி நேரத்தை அவை துணை தலைவர் தொடர்ந்ததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் வரும் திங்கட்கிழமை காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைத்து துணை சபாநாயகர் உத்தரவிட்டார்.