எழுத்தின் அளவு: அ+ அ- அ
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 20வது நாளான இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது. பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியபோது, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு மத்தியில் குற்ற வழக்குகளில் சிக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில, யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் வகையிலான புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
தீவிர குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி 30 நாட்கள் சிறையில் இருப்பவர்களை பதவியில் இருந்து நீக்கும் வகையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கோஷம் எழுப்பி அமித்ஷா மீது காகிதங்களை வீசி எறிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னதாக எதிர்க்கட்சிகளின் கடும் அமலிக்கு இடையே மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இணைய விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். எனினும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு போராட்டத்திற்கு இடையிலும் அரசு தனது பணிகளை தொடரும் என்று தெரிவித்தார்.