எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள நிலையில், இங்கிலாந்துடன் இந்தியா செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும், வேறு பல அம்சங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாட்கள் பயணமாக நேற்று மும்பை வந்தார். அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்பட 125 பிரதிநிதிகளையும் இங்கிலாந்து பிரதமர் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், மும்பையில் பிரதமர் மோடியை, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை நடத்துவற்காக ராஜ்பவன் வந்த இங்கிலாந்து பிரதமரை, பிரதமர் மோடி கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். கடந்த ஜூலையில் இரு நாடுகளும் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் பற்றி இருவரும் ஆய்வு செய்தனர். மேலும் செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, ராணுவம், கல்வி, சுகாதாரம், காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கும்- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையிலான பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து பிரதமர் மோடி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக கூறினார். தமது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டதாக குறிப்பிட்ட அவர், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், வர்த்தகம் அதிகரிக்கும், இதனால் நமது தொழில்கள் மற்றும் நுகர்வோர் பயனடைவார்கள் என்றும் கூறினார்.
இன்றைய கூட்டத்தில், இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் உக்ரைன் மோதல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், உக்ரைன் மோதல் மற்றும் காசா பிரச்சினைகளில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நவீன கூட்டாண்மையை இரு நாடுகளும் உருவாக்கி இருப்பதாக கூறினார். இதன் காரணமாகேவ கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து-இந்தியா இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இது ஒரு திருப்புமுனை தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்டணங்களைக் குறைக்கவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஒருவருக்கொருவர் சந்தைகளுக்கான அணுகலை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று ஸ்டார்மர் கூறினார். இது ஒப்பந்தம் என்பதை விட இரண்டு பெரிய நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு அளித்த நம்பிக்கையின் உணர்வு என்றும் அவர் தெரிவித்தார்.