எழுத்தின் அளவு: அ+ அ- அ
இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள GSLV-F16 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.40 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எப்16 ராக்கெட் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள நிசார் செயற்கைக்கோள் பொறுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 392 கிலோ எடைகொண்ட நிசார் செயற்கைக்கோள், உலக அளவில் பேரிடர்கள், விவசாயம் மற்றும் காலநிலை குறித்த முக்கியமான தரவுகளை வழங்க உள்ளது. மேலும், 12 நாட்களுக்கு ஒரு முறை உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமித் தரவுகளை வழங்க உள்ள செயற்கைக்கோள், இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் துல்லியமான படங்களையும் வழங்க உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறை என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
ஜி.எஸ்.எல்.வி-எப்16 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.