இன்று இரவு கரையைக் கடக்கிறது டானா புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் மேற்கு வங்கம், ஒடிசா இடையே இன்று இரவு முதல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒடிசாவில் கன மழை பெய்து வருகிறது. 


வங்கக் கடலில் கடந்த 21ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர புயலாக வலுப்பெற்றது. டானா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தீவிர புயலாக ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே இன்று இரவு முதல் கரையைக் கடக்க தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கன மழையுடன் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரித்துள்ளது. புயலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாநில, மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படும் சாகர் தீவுகள் மற்றும் காக்திவிப் பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், பாங்குரா, ஹூக்ளி, ஹவ்ரா, புர்பா மெதினிபூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயல் மழையை அடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் 15 மணி நேரத்துக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

varient
Night
Day