இந்தியா - பிரிட்டன் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின்போது வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு 4 நாள் அரசு முறை பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக இங்கிலாந்து நாட்டின் லண்டன்  சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து லண்டனில் உள்ள விடுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு திரண்டிருந்த இங்கிலாந்து வாழ் இந்தியர்களை சந்தித்தார். அப்போது ஆரவாரம் செய்த இந்திய வம்சாவளியினருடன் கை குலுக்கி பேசி பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்தில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான சராசரி வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் இறக்கமதி  செய்யப்படும் 99 சதவீத பொருட்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் குளிர்பானங்கள் முதல் கார்கள் வரையிலான இந்திய பொருட்களை, இங்கிலாந்தில் விற்பனை செய்ய எளிதாகும் என சொல்லப்படுகிறது. இதேபோன்று இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இங்கிலாந்து விஸ்கி மீதான வரி 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பல வருட கடின உழைப்புக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக கூறினார். இந்த ஒப்பந்தம் இருநாடுகளின் செழிப்புக்கான திட்டம் எனவும் குறிப்பாக இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு பெரும் பயன் தரும் எனவும் பிரதமர் மோடி பேசினார். மறுபுறம், இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் நியாயமான மற்றும் மலிவு விலையில் இந்திய மக்களுக்கும் தொழில்துறைக்கும் கிடைக்கும் என பிரதமர் மோடி பேசினார்.

Night
Day