இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் - நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தும் வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்திருந்த போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை துவங்கப்பட்டது.  9 மாதங்களுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து பிரதமரை தொலைபேசியில் பிரதமர் மோடி இன்று தொடர்பு கொண்டு பேசினார். இப்போது இரு தலைவர்களும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை கூட்டாக வெளியிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே வர்ததகம், முதலீடு மற்றும் பகிரப்பட்ட வாய்ப்புகளுக்கு இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஊக்கியாக செயல்படும் என்பதை உரையாடலின் போது இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதுடன் அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவும் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

இதனிடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், இந்தியாவுடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளதாக கூறியுள்ளார்.  இதன் மூலம் நியூசிலாந்து விவசாயிகள், மற்றும் தொழில் துறைக்கான கதவுகள் திறக்கப்படும் என்றும்,  ஏற்றுமதியை அதிகரித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதலில்  நியூசிலாந்து மக்கள் முன்னேறவும் வருவாயை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நியூசிலாந்துடனான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். ஒப்பந்தம் குறித்து டெல்லியில் பேட்டியளித்த அவர், விரிவான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய இந்த ஒப்பந்தம், பிரதமர் மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் லக்சன் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்று கூறினார். வர்த்தகம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதுமை, சேவைத் துறை, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகியவற்றை மட்டும் உள்ளடக்காமல், இரு தரப்பு உறவுகளை மிக உயர்ந்த மூலோபாய மட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் உயர்த்தும் என்றும் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் தெரிரிவித்தார். 

மேலும், இந்த ஒப்பந்தம் ஏற்றுமதியாளர்களின் அனைத்து பிரிவுகளுக்கும் வாய்ப்புகளை வழங்கும் என்றும், பல்வேறு துறைகளில் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் உதவும் வகையிலும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Night
Day