ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற குஜராத் இளைஞர் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்டு இதுவரை 26 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 50 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்றுவரும் போரில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். 

இதனிடையே, ரஷ்யாவுக்கு  செல்லும் வெளிநாட்டினர் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து 202  இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் சாகேத் கோகலே மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் 202 இந்தியர்களில் 119 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் 26 பேர் இறந்துவிட்டதாகவும், 7 பேர் காணாமல் போனதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எஞ்சிய 50 பேரை முன்கூட்டியே விடுவிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். 

இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர ஈர்க்கப்பட்டு போர் முனைகளுக்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யா-உக்ரைன் மோதலில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு தற்போது உக்ரைன் பிடியில் உள்ள தன்னை மீட்குமாறு குஜராத்தை சேர்ந்த இளைஞர் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். சாஹில் முகமது ஹுசைன் என்ற அந்த இளைஞர் பேசியுள்ள வீடியோவை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் உயர் கல்வி படிக்க ரஷ்யாவுக்கு வந்த தன்னை,  ரஷ்ய காவல்துறை போதைப்பொருள் வழக்கில் பொய்யாக சிக்க வைத்து ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்தாக அவர் கூறியுள்ளார். வழக்கில் இருந்து விடுபடுவதற்காக இதற்கு ஒப்புக் கொண்டதாகவும், போர் முனைக்கு சென்றதும் முதல் விஷயமாக உக்ரைன் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும் ஹுசைன் வீடியோவில் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனில் கைதியாக உள்ள முகமது ஹுசைன் தன்னை மீட்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே தனது மகனை மீட்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் ஹுசைனின் தாயார்  மனு தாக்கல் செய்துள்ளார்.

Night
Day