பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது... எத்தியோப்பியா அரசு கௌரவிப்பு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கி கௌரவித்த அந்நாட்டுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, உலகளாவிய சவால்களை எத்தியோப்பியாவுடன் இணைந்து இந்தியா எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.
 
மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்தக்கட்டமாக எத்தியோப்பியா சென்றடைந்தார். அடிஸ் அபாபா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடியை, கலை நாட்டியங்களுடன் இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். அடிஸ் அபாபாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது உடன் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். 

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி இந்த உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரப்படுத்தினார். இந்த உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதை பெற்ற முதல் உலக தலைவர் எனும் சிறப்பை பெற்ற பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளிடம் இருந்து இதுவரை 28 உயரிய விருதுகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கௌரவித்த அந்நாட்டு அரசுக்கும், பிரதமர் அபி அகமது அலிக்கும், எத்தியோப்பியா மக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  
மிகப் பழமையான மற்றும் வளமான நாகரிகங்களில் ஒன்றால் கௌரவிக்கப்பட்டது மிகுந்த பெருமைக்குரியது என்று கூறிய பிரதமர் மோடி, இந்த மரியாதை பல ஆண்டுகளாக நமது கூட்டாண்மையை வடிவமைத்து வலுப்படுத்திய எண்ணற்ற இந்தியர்களுக்குச் சொந்தமானது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.

Night
Day