ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது... வாக்குச்சீட்டுகளில் திருத்தம் செய்து தேர்தல் அதிகாரி சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சண்டீகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது...

இத்தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்த தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ், பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

அதே சமயம் தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகளில் தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் திருத்தம் செய்தது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அம்பலம் ஆனது.

குறிப்பாக வாக்குச்சீட்டில் திருத்தம் செய்த போது, தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ், கண்காணிப்பு கேமராவை பார்த்ததும் பலத்த சந்தேகத்தை எழுப்பியது.

இந்நிலையில் தேர்தல் அதிகாரியின் முடிவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவரை உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து திங்களன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ்ஹிடம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

வாக்குச்சீட்டில் எக்ஸ் குறியிட்டது உண்மையா இல்லையா என தலைமை நீதிபதி கேட்ட போது, திருத்தம் செய்ததை அனில் மாசிஹ் ஒப்புக்கொண்டார்.

எத்தனை வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் குறியீடு இட்டீர்கள் என தலைமை நீதிபதி கேட்டபோது 8 வாக்குகளில் எக்ஸ் குறியீடு செய்ததாக அனில் மாசிஹ் பதிலளித்தார்.

இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்கு சீட்டுகளை இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அனில் மாசிஹ்ஹையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

அதன்படி செல்லாது என அறிவிக்கப்பட்ட எட்டு வாக்குகளும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஆம் ஆத்மி - காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாக விழுந்த 8 வாக்குச்சீட்டுகளிலும் தேர்தல் அதிகாரி எக்ஸ் குறியிட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவித்தனர்.

தொடர்ந்து தேர்தல் அதிகாரி சட்டவிரோதமாக செயல்பட்டதாக அறிவித்த நீதிபதிகள், பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து, ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

கிரிமினல் சட்டப்பிரிவு 340-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் அளிக்குகுமாறு, தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ்ஹுக்கு நீதித்துறை பதிவாளர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Night
Day