அரசு மரியாதையுடன் ஜூபின் கார்க் உடல் தகனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல பாடகர் ஜூபின் கார்க் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த பாடகருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகரான ஜூபின் கார்க், அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 52 வயதான இவர், அண்மையில் சிங்கப்பூரில் நடந்த ‘வடகிழக்கு விழா’வுக்காக இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அப்போது ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், சிகிச்சை  பலனின்றி ஜூபின் கார்க் உயிரிழந்தார்.

ஜூபின் கார்க்கின் திடீர் மறைவு அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இருந்து கவுஹாத்தி கொண்டு வரப்பட்டு அங்குள்ள அர்ஜூன் போகேஸ்வர் பருவா விளையாட்டு மைய கட்டிட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூபின் கார்க்கின் உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜூபின் கார்க் உடல் இன்று 2வது முறையாக எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இறுதிச் சடங்கிற்காக ஜூபின் கார்க் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சோனாப்பூர் வருவாய் வட்டத்தில் உள்ள காமர்குச்சி என்சி கிராமத்திற்கு கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இறுதிச் சடங்கிற்காக காமர்குச்சி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜூபின் கார்க் உடலுக்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஜூபின் கார்க் உடல் தகனம் செய்யப்பட்டது. ஜூபின் கார்க் மறைவுக்கு அசாம் அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Night
Day