அமலுக்கு வந்தது திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது.

நாடு முழுவதும் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் 5 சதவீதம், 18 சதவீதம் என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்கும் நோக்கில் ‘ஜிஎஸ்டி 2.0’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 விழுக்காடு வரியும் இதர பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18 விழுக்காடு வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், மிதிவண்டிகள், சமையலறைப் பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்தது. பென்சில்கள், அழிப்பான்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான எழுது பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் குறைந்துள்ளது. அதேபோல், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தனிநபர் ஆயுள் காப்பீட்டு சந்தா தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்கள், தெளிப்பான்கள், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றின் விலையும் குறைந்தது. ஜிஎஸ்டி 2.0வை தொடர்ந்து 28 சதவீதம் என்ற வரி விதிப்பையே முழுமையாக நீக்குவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு நீக்கப்படும் பட்சத்தில் 28 சதவீதம் வரி விதிப்பின் கீழ் இருக்கக்கூடிய பல்வேறு பொருட்களும் 18 சதவீதம் வரி விதிப்பின் கீழ் வந்துவிடும். எனவே இந்த பொருட்களின் விலையில் 10 சதவீதம் வரை குறையும் என்பதால் மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day