'இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் தொடக்கம்' - பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-


ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மூலம் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்றும் இனி பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார. உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த மிகப் பெரிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா என்றும் இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது என்றும் கூறினார். 

நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால கனவுகளை மனதில் கொண்டு, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், இது நாட்டின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதன் மூலம் ஏழைகள், நடுத்தர வர்த்தகத்தினர், மகளிர், விவசாயிகள், தொழில்துறையினருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்று கூறினார். 

இனி 5 மற்றும் 18 சதவீதம் எனற இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். முன்பு 12% வரி விதிக்கப்பட்ட பொருட்களில், 99% பொருட்கள் இப்போது 5% வரி அடுக்குக்குள் வந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நடுத்தர மக்கள் தங்கள் இலக்குகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

உணவு, மருந்து வீட்டு உபயேகப் பொருடகளில் விலை இனி குறையும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, நாளை முதல் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை மக்கள் குறைந்த விலையில் வாங்க முடியும் என்றும் கூறினார். இதன் மூலம் நடுத்தர மக்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் எற்படும் என்றும், இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார்.

2ம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அந்நிய முதலீட்டை ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும் அனைத்து மாநிலங்களும் வேகமாக முன்னேறும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். திருத்தி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி மூலம் பல்வேறு பெயர்களால் ஆன மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் அகன்றன என்றும் வரி விதிப்பு முறை எளிதாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என்று கூறிய அவர், பொருட்களை இயன்றவரை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். உள்நாட்டு தயாரிப்பு உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சுயசார்பை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே தற்போதைய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதை தொடர்ந்து, எக்ஸ்வலை தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், பொருளாதாரத்தில் முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பரவலான கவலைகள் அர்த்தமுள்ள வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதியாளர்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் விவசாய உள்ளீடுகள் போன்ற துறைசார் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு அவசியமான தனியார் முதலீட்டை இந்த வரிசீர்திருத்தம் அதிகரிக்குமா என்பதை கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Night
Day